தஞ்சாவூர், செப். 1: தஞ்சாவூர் காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்க துணை தலைவர் பேராசிரியர் திருமேனி தலைமை வகித்தார். செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், தஞ்சை-பட்டுக்கோட்டை, தஞ்சை-அரியலூர் ரயில்வே திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தஞ்சை-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை பணிகளை தொடங்கி கும்பகோணம் மகாமகம் திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க வேண்டும்.
தஞ்சை- சென்னைக்கு பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும். தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து பெரியகோயிலுக்கு விரைந்து செல்ல புதிய குறுக்கு வழி சாலையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தொடர்ந்து தஞ்சாவூர் ரயில்வே கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றம் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி வரும் முரசொலி எம்.பி.க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கண்ணன், வக்கீல்கள் உமர்முக்தர், பைசல்அகமது, புலவர் செல்லகணேசன், ராமசந்திரசேகரன், பொறியாளர் சாமிதுரை, ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.