தஞ்சாவூர், மே 12: தஞ்சை மாவட்டம் திருவையாறு, அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களில் அட்மா திட்டம் குறித்து டெல்லி ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா திட்டம்) அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் சகோதரத்துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பங்களை பயிற்சிகள், செயல் விளக்கங்கள், கண்டுணர்வு பயணங்கள் மற்றும் வயல்வெளி பள்ளி போன்ற விரிவாக்க செயல் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது அட்மா திட்டத்தின் நோக்கம் ஆகும். தமிழ்நாட்டில் 2012ம் ஆண்டு முதல் அட்மா திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தினை ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் துணை செயலர் அனுஜுப் சிங் பிஷ் தலைமையில், சார்புச் செயலர் பொன்னி, துணை இயக்குனர் பானுமதி மற்றும் மண்டல மனை பொருளாதார நிபுணர் ஜீஷ்னு ஆகியோர் அடங்கிய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருவையாறு வட்டாரத்தில் வானரங்குடி கிராமத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிவக்குமார் என்பவரது நெல் வயலில் அமைக்கப்பட்ட செயல் விளக்க திடலை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். பின்பு தஞ்சாவூர் வட்டாரம் அம்மன்பேட்டை கிராமத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் செய்திகளை விவசாயிகளுக்கு பரப்புரை செய்யும் திட்டத்தினையும், தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நெல்லுக்குப் பின் பயறு வகை சாகுபடி என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்டத்திற்கு உள்ளான விவசாயிகள் பயிற்சியினையும் நேரில் ஆய்வு செய்தனர்.
அம்மாபேட்டை வட்டாரத்தில் நல்ல வன்னியன் குடிகாடு கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஷ்டி என்ற தலைப்பின் கீழ் சுமார் நூறு விவசாயிகள் பங்கு பெற்ற வயல் தின விழாவினை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா மாவட்டத்தில் அட்மா திட்ட செயல்பட்டினை குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.