Saturday, June 14, 2025
Home மருத்துவம்ஆலோசனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்
ரவுண்ட்ஸ்

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சை நகரில் 1950களிலேயே தொடங்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. ‘குங்குமம் டாக்டர்’ ரவுண்ட்ஸ் பகுதிக்காக மருத்துவமனைக்கு விசிட் அடித்தோம்.தஞ்சாவூரில் வேளாண் தொழிலே பிரதானம் என்பதால் மருத்துவமனையில் சிறு விவசாயிகள், விவசாயகூலி தொழிலாளர்கள் அதிகம் பார்க்க முடிந்தது.மருத்துவக் கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ் மருத்துவ மனையின் வரலாறு தொடர்பாகவும், வசதிகள் தொடர்பாகவும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.‘‘தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி தேவை என்பதை உணர்ந்த தமிழக அரசு, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் வல்லத்துக்கு முன் இடம் தேர்வு செய்தது. மருத்துவக்கல்லூரிக்கு 1958-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.1959-ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தது. தஞ்சாவூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ராசா மிராசுதார் மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 1960-ம் ஆண்டு 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டது.படிப்படியாக வளர்ந்து டெல்டா மாவட்ட மக்களுக்கான பிரதான மருத்துவமனையாக உள்ளது. தற்போது 1,172 படுக்கைகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துமவனை செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் 150 கோடி மதிப்பீட்டில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன், மருத்துவமனை கண்காணிப்பாளர், RMO, இரண்டு ARMO தவிர 35 பேராசிரியர்கள், 110 உதவி பேராசிரியர்கள், 298 நர்ஸ்கள் பணியாற்றி வருகிறோம்.எங்கள் மருத்துவமனையில் பொது மருத்துவம், மூளை நரம்பியல், ரத்த நாள அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, சிறுநீரகத்துறை, புற்றுநோய் மையம், நுண்கதிர் துறை, புற்றுநோய் கதிர்வீச்சு துறை, மனநல மருத்துவம், முடநீக்கியல் துறை, பிளாஸ்டிக் சர்ஜரி, நுண்ணுயிரியல் துறை, மயக்கவியல் துறை, காது மூக்கு தொண்டை சிகிச்சைத்துறை, மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்கள் துறை, கண்மருத்துவத்துறை என ஏராளமான துறைகள் உள்ளன.எங்கள் மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 150 எம்.பி.பி.எஸ்., 102 முதுநிலை மருத்துவ இடங்கள் 100 நர்சிங் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 5 அறுவை சிகிச்சை அரங்குகள் ஒவ்வொன்றும் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை போன்ற பெரு நகரங்களில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு இணையான நவீன சிகிச்சை வழங்கி வருகிறோம்’’ என்றார்.ஆர்.எம்.ஓ டாக்டர் செல்வம்‘‘விஷக்கடிக்கு என தனி பிரிவு உருவாக்க வேண்டும் என அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஏனெனில் தினமும் பாம்பு கடி, பிற விஷ ஜந்துக்கள் கடித்து ஆபத்தான நிலையில் நோயாளிகள் வருகின்றனர். மேலும் எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது 12 படுக்கைகள் மட்டுமே இந்நோயாளிகளுக்காக உள்ளது.இம்மருந்து சாதாரணமாக மளிகை கடை, பெட்டிக்கடைகளில் கூட விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். உரிமம் பெற்றே இதுபோன்ற மருந்தை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு துவங்கப்பட உள்ளது. இதன் மூலம் விபத்தில் சிக்குவோர் ஒரே கூரையின் கீழ் அனைத்து விதமான சிகிச்சைகளையும் பெற முடியும். இதில் நோயாளிகளின் பாதிப்பைப் பொறுத்து பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற சிகிச்சை முறைகள் கையாளப்பட உள்ளது. இதற்காக தனி கட்டடத்தில் அனைத்து வசதிகளுடன் தனி கட்டிடம் தயாராகிவருகிறது.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 ரத்த தான முகாமின் மூலம் 5 ஆயிரம் யூனிட் வரையும், மருத்துவமனைகளில் 10 ஆயிரம் யூனிட் வரையும் சேகரிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரத்த பரிசோதனை கூடம் செயல்பட்டு வருகிறது. 18 வயது முதல் 55 வயது வரையிலான 45 கிலோவுக்கு மேல் எடை உள்ள அனைவரும் ரத்த தானம் செய்யலாம்.மயக்கவியல் துறையில் 2 இணை பேராசிரியர்கள், 15 உதவி பேராசிரியர்கள், 11 முதுநிலை மருத்துவ மாணவர்கள், 19 உதவியாளர்கள் பணியில் உள்ளனர். வலியில்லா பிரசவம், நாள்பட்ட வலிகளுக்கான மருத்துவம், உயிர் காக்கும் அவசர சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை, விஷ முறிவு சிகிச்சை, இதய நுரையீரல் துறை, அவசர சிகிச்சை, மனநோய் பாதித்தவர்களுக்கான சிகிச்சை, சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு மயக்க மருந்து கொடுத்தல் என பல்வேறு விதமான சிகிச்சைகளும் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருக்கிறோம்.’’டாக்டர் நமச்சிவாயம் (பொது மருத்துவத்துறை தலைவர்)‘‘தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத்துறை தீவிர சிகிச்சை பிரிவு, விஷ முறிவு சிகிச்சை பிரிவு, தொற்றா நோய்கள் சிகிச்சைப்பிரிவு உள்பட 6 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. புறநோயாளிகள் பிரிவு தினமும் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை இயங்குகிறது. இதில் 200 முதல் 250 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.அவர்களில் 100 பேர் வரை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை நோய் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படுகிறது.செவ்வாய், வியாழன், சனிக்கிழமையன்று அதிக ரத்த அழுத்தத்திற்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. முதியோருக்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவும், உள்நோயாளிகள் பிரிவும் கடந்த ஓர் ஆண்டாக செயல்பட்டு வருகிறது.’’டாக்டர் பாரதி (மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் முடநீக்கியல் துறை தலைவர்)‘‘தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கியல் துறை 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.3 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பட்டு வருகிறது.; எங்கள் துறையில் நாள் ஒன்றுக்கு 250 வெளிநோயாளிகள், 50 உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். இதில் கடந்த ஆண்டு 1,250 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பெரும்பாலானவர்களுக்கு முதல்வரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக; அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள சில லட்ச ரூபாய் செலவாகும்.’’டாக்டர் யூனிஸ் சொர்ணா ஜேக்கப் (நுண்ணுயிரியல்; துறைத் தலைவர்)‘‘எங்கள் துறை ஆய்வகம் அவசர சிகிச்சை பிரிவு, பிரதான் மந்திரி சுரக்தா பீமா யோஜனா பிரிவு, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகிய 3இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சையால் ஏற்படும் நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று கட்டுப்பாட்டுக்குழு, உயிர் மருத்துவ கழிவுகள், அறுவை அரங்கு கிருமி நீக்கம் செய்தல், தண்ணீரால் பரவும் நோய் தொற்று அறிதல் ஆகியவை நுண்ணுயிரியல் துறையினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.’’டாக்டர் ராஜா (புற்றுநோய் மருந்தியல் துறை தலைவர்)‘‘புற்றுநோய் மையத்தில் மருந்தியல், கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை என மூன்று பிரிவுகளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்தியல் பிரிவில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் புதிய நோயாளிகளும், 1200 பேர் உள், வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மக்களுக்கு புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாள்பட்டு நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையில் கொண்டு வந்தால் புற்றுநோயை முழுமையாக குணமாக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.’’எட்வர்ட் ராஜ் (உள்நோயாளி, குடவாசல்)‘‘வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் சொந்த ஊர் வந்தேன். கடந்த 28-ம் தேதி பைக்கில் செல்லும்போது கீழே விழுந்ததில் தலையில் உள்காயம் ஏற்பட்டு மயங்கிவிட்டேன். உடனடியாக என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். தலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் வரை நினைவின்றியே இருந்தேன். இங்குள்ள மருத்துவர்கள் சிறப்பான மருத்துவ சேவை அளித்து என்னை காப்பாற்றிவிட்டனர்.’’வடிவேல் (உள்நோயாளி, பூம்புகார்)‘‘3 வருடமாக இடுப்பில் கடுமையான வலி வந்து நடக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். இதனால் கட்டிடவேலைக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. அதிக வலியாக இருந்த இடது கால் இடுப்பு மூட்டில் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளேன். தற்போது என்னால் எழுந்து நடக்கமுடிகிறது.’143 வருடங்களை கடந்த ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை1874 முதல் 1877 வரை தஞ்சை மாவட்ட கலெக்டராக ஹென்றி சல்லிவன் தாமஸ் இருந்தார். அவர் தஞ்சையில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை கட்ட விரும்பினார். 1875-ம் ஆண்டு தஞ்சையில் ஒரு மருத்துவப் பள்ளி துவங்கப்பட்டது. அந்த பள்ளிக்கு அப்போதைய பிரிட்டிஷ் இளவரசரின் இந்திய வருகையையொட்டி வேல்ஸ் இளவரசர் மருத்துவப்பள்ளி என பெயரிடப்பட்டது.இதற்கிடையே அதே வளாகத்திற்கு அருகே தஞ்சை மராட்டிய பேரரசின் ஆட்சியாளர்கள் 40 ஏக்கர் நிலம், பணம் வழங்கினார். அப்போதைய தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் வாழ்ந்த சமூக தலைவர்களும் நிதியுதவி அளித்தனர்.மருத்துவமனையின் பல பகுதிகள் முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாக விரிவாக்கப்பட்டது. அரச குடும்பத்தினர், தஞ்சை மிராசுதார்களும் இம்மருத்துவமனை உதவியதால் ராசா மிராசுதார் மருத்துவமனை என பெயர் வைக்கப்பட்டது. 1875-ல் தொடங்கப்பட்ட மருத்துவப்பள்ளி 1933-ம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது.ஆனால், 143 ஆண்டுகளை கடந்தும் இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே மருத்துவமனை உள்ளது. கலெக்டர் ஹென்றி சல்லிவன் தாமசை நினைவு கூறும் வகையில் மருத்துவமனையின் மைய கட்டிடம் தாமஸ் ஹால் அழைக்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலேயே முதன்முறையாக திருநங்கைகள் 8 பேர் ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகளாக பணியில் மகப்பேறு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசின் கவனத்துக்கு…* தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் சிரமப்படுகின்றனர். நோயாளிகளுக்கு சரியான தகவல் கொடுக்கும் தகவல் மையம் இல்லை. இதனால் எந்த சிகிச்சைக்கு எந்த பகுதிக்கு செல்ல வேண்டும், எந்தெந்த வார்டுகள் எந்த கட்டடத்தில் அமைந்துள்ளது என்று தெரியாமல் நோயாளிகள், அவர்கள் குடும்பத்தினர் குழப்பமடைகின்றனர்.* மருத்துவமனை காவலாளி உள்ளிட்ட உதவியாளர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவதால் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவது தொடர்கிறது.– சுந்தர் பார்த்தசாரதி,அ.ஞானபாஸ்கரன்படங்கள்: பி.பரணிதரன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi