தஞ்சாவூர், ஜூன் 27: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில குருதி பறிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், தஞ்சாவூர் மாவட்டம் இரத்த மையங்கள் இணைந்து உலக குருதி கொடையாளர் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணி மூலம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து குருதி கொடையாளர்கள் விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட குருதி கொடையாளர்களை கௌரவபடுத்தும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்பிரமணியன், இணை இயக்குநர் (சுகாதாரம்) செல்வகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி , மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் ஜெனிபர் அருள்மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.