திருச்சி, ஆக.14: ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘Har Ghar Tirange” இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி 78வது சுதந்திர பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இல்லந்தோறும் மூவர்ணக்கொடி 3.0 இயக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப்பட பகுதியில் மூர்வணக் கொடி படத்தை வைப்பதையும் தங்கள் வீடுகள், தெருக்களில் மூர்வணக்கொடியை ஏற்றுவதையும் இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது. ஒரு தேசிய கொடியின் விலை ₹25 வீதம் அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் POST office-ல் ONLINE ஆர்டர் செய்தால் இந்திய அஞ்சல் துறை அஞ்சலகங்கள் மூலம் தங்கள் வீட்டிற்கே தேசிய கொடி டெலிவரி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி ஒன்றிய மண்டலம் சார்பாக ‘ஹர் கர் திரங்கா’-‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி 3.0’ விழிப்புணர்வு பேரணி திருச்சி தலைமை அஞ்சலகம் முதல் மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம் வரை நடத்தப்பட்டது. தலைமை அஞ்சலத்தில் தொடங்கிய இப்பேரணியை திருச்சி ஒன்றிய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சேவா சங்க பள்ளி NCC மாணவிகள் மற்றும் மண்டல அலுவலகம், கோட்ட அலுவலகம், தலைமை அஞ்சலகம் மற்றும் RMS கோட்ட அலுவலக அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.
அஞ்சல்துறைத் தலைவர் நிர்மலா தேவி, பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்கள் அஞ்சலகங்கள் மூலம் தேசிய கொடியை பெற்று தங்கள் வீட்டில் தேசிய கொடியை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்.