தக்கலை, ஆக.23: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு குமரி மாவட்டக் கிளை நிர்வாகிகளின் முன்னெடுப்பில் ஊதியமில்லா ஆசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டம் தக்கலையில் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு நிர்வாகப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமனம் பெற்று ஊதியமின்றி பணிபுரிந்து வரும் 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பங்கேற்று கருத்துப் பகிர்வு செய்தனர்.
அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் பெற்று ஊதியமின்றி பணி செய்து வருகின்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் பெற்றுத் தந்திடத் தேவையான சட்டப் போராட்டங்களுடன், களப் போராட்டங்களையும் முன்னெடுத்திட 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இக்குழு 26.08.2024 அன்று மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ரைமன்ட் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கண்ணன், செயல் தலைவர் கனகராஜ், துணைப் பொதுச் செயலாளர் சிவ ரமேஷ், மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ், பொருளாளர் சாந்த சீலன் ஆகியோருடன் நிர்வாகிகள் அகஸ்டஸ் சிங், டெல்லஸ், ஜோணி மோசஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.