நெய்வேலி, ஜூலை 10: நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் மாடு மேய்ந்த தகராறில் காயம் அடைந்தவர் உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர். நெய்வேலி அருகே கீழ்வடக்குத்து கிராமத்தில் வசித்து வரும் சகோதரர்கள் சாரங்கபாணி(75), விஸ்வநாதன்(70). இவர்களது வீடு அருகருகே அமைந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாலை சாரங்கபாணியின் மாடு, விஸ்வநாதன் வீட்டு வசலில் மேய்ந்துள்ளது. இதனால், சாரங்கபாணி மனைவி ராஜாமணிக்கும், விஸ்வநாதன் மனைவி கஸ்தூரிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மோதலாக முடிந்தது.
இதில், விஸ்வநாதன் மகன் ரகுபதி(37) படுகாயம் அடைந்தார். ரகுபதி சென்னை குடிநீர் வாரியத்தில் எலக்ட்ரீசியனாக வேலை வருகிறார். இவரது மனைவி வைதேகி. இதையடுத்து, அவரை புதுச்சேரி தனியார் மருத்துவமனையிலும், விஸ்வநாதன், வைதேகி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக வைதேகி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து சாரங்கபாணி, ராஜாமணி, உறவினர் அனிதா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உதயசூரியன், ரஞ்சினிகுமார் மற்றும் ரஞ்சினிகுமார் மனைவி பரிமளா ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வைதேகியின் உறவினர்கள் சுமார் 300 பேர் ஒன்று திரண்டு ரகுபதியின் சடலத்தை வைத்து சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குத்து பேருந்து நிறுத்தத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜ்குமார், ஆய்வாளர் சாகுல் ஹமீது வடக்குத்து விஏஓ விஸ்வநாதன் ஆகியோர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ரகுபதியை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சடலத்தை எடுத்துச் சென்றனர். இதனால், சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.