நன்றி குங்குமம் டாக்டர் தொழில்நுட்பம்ஐ.வி.எஃப் சிகிச்சையில் ஆர்டர் கொடுக்கும் இளைய தலைமுறைஎல்லாவற்றிலும், விவேகமாக செயல்படும் இன்றைய தலைமுறையினர், தங்களுடைய புத்திசாலித்தனத்தை பிரசவத்திலும் விட்டு வைக்கவில்லை. காலத்தையும், பொருளையும் மிச்சப்படுத்தும் மாற்றுச் சிந்தனையை அதிலும் கையில் எடுத்திருக்கிறார்கள். செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக முளைத்திருந்தாலும்,; அதன் சிகிச்சை முறைகளில் நாளுக்குநாள் பல வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இப்போது செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான இளம் தம்பதிகள், ‘எங்களுக்கு இந்த சிகிச்சையில் இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பெறுவதற்கான சாத்தியம் இருக்கிறதா, அதைவிட அட்வான்ஸாக Triple person pregnancy-க்கு சான்ஸ் இருக்கிறதா என்று கேட்பது அதிகரித்திருப்பதாக ஐ.வி.எஃப் சிகிச்சை உலகம் பரபரக்கிறது.செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் நந்தினியிடம் இந்த புதிய கலாசாரம் பற்றியும், அதற்கான சாத்தியங்கள் பற்றியும் கேட்டோம்…தற்போது IVF சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை பெருகி வரும் அதேநேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதிகரித்துவிட்டது.அதிலும், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் தம்பதிகளிடத்தில், ‘ஏன் ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது, ஒரே நேரத்தில் வேலை முடிந்து விடுமே’ என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, அவர்களின் நேரமின்மை, தொழில்முறை அழுத்தங்கள், வாழ்க்கை லட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.IVF முறையில் இரட்டைக் குழந்தைகள் சாத்தியமா?பொதுவாகவே IVF சிகிச்சை முறையில் நல்ல நிலையில் உள்ள 2 கரு முட்டைகளை கருவுக்குள் வைப்போம். ஒன்று தோல்வி அடைந்தால் கூட மற்றொன்றில் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது என்பதால் இது மாதிரி செய்கிறோம். ஏனெனில், ஒரு கரு முட்டையை மட்டும் கர்ப்பப்பைக்குள் செலுத்துவதால் கண்டிப்பாக கரு உருவாகும் என்று உறுதி சொல்ல முடியாது.சிலருக்கு 2 கருமுட்டையை வைக்கும்போது ஒன்று Early division-ல் மூன்றாக பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. சிலவற்றில் 1, 2ஆக பிரியும். 2, 3 ஆகப் பிரியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் கருமுட்டைகளை PGD, PGS (Preimplantation Genetic screening) சோதனை செய்து நல்ல தரமான கரு முட்டையை வைக்கும்போது Early Divisionல் பிரிந்து இரட்டைக் கரு உருவாகவும் வாய்ப்பிருக்கிறது.இந்த மாதிரி Early Division ஆகப்பிரியும் கருமுட்டைகளால், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு பெண்ணின் வயது, அவரது உடல் ஆரோக்கியம் மற்றும் கரு நிலைத்திறன் இப்படி, IVF சுழற்சிகளின் வெற்றியில் பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.எதனால் இரட்டைக் குழந்தைக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது?அதற்கு காரணம் இந்த சிகிச்சைக்கான அதிக கட்டணமும், கால தாமதமும்தான். ஒருவர் முழுமையான செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முடிப்பதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. நிறைய வருடங்கள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதாலும், வயதான பின் மேற்கொள்ளப்படும் சிகிச்சையினாலும் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குழந்தை என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை என்றாலும் சிகிச்சைக்கான காலமும் பணமும் ஒரே மாதிரிதான்.அடுத்த குழந்தைக்கு மீண்டும் IVF சிகிச்சை செலவு, பிரசவ செலவு என்று பொருளாதார பளுவை சுமக்க அவர்கள் தயாராக இல்லை. நாம் ஏன் சாதுர்யமாக இரட்டைக் குழந்தைக்கு முயற்சி செய்யக் கூடாது என்று சிந்திக்கிறார்கள்.இவர்களுக்கு ஒரு படி மேல் சிந்திக்கும் சம்பாதிக்கும் பெண்களோ, ஒரு பிரசவ கால விடுப்பில் இரண்டு குழந்தைகளையும் பெற்று வளர்த்து விட்டால், அடுத்து தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தில் கவனம் செலுத்தலாமே என்று யோசிக்கிறார்கள்.IVF முறையில் உருவான இரட்டைக்கருவில் கவனத்தில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?பொதுவாகவே இரட்டை, மூன்று குழந்தைகள் உருவாகும்போது, குறைமாத குழந்தை பிறப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. மேலும், ஒரு குழந்தை நன்றாக வளரும், மற்றொன்று குறைவான வளர்ச்சியில் இருக்கும். தாய்க்கு நிறைய ரத்தப்போக்கு ஏற்படும். ஒரு குழந்தை உள்ள தாய்க்கே ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, இவர்களுக்கு அனிமியா போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் வரும்.குறை மாத பிரசவத்திற்கும், தாயின் பிரசவ நேர இறப்பிற்கும் அதிகப்படியான வாய்ப்பு இருப்பதால் மூன்று குழந்தைகள் ஆபத்தானது. அப்படி இருந்தாலும் தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதிகம் இருப்பதால், ஒரு கருவை குறைத்துக் கொள்ள வலியுறுத்துவோம்.பிரசவ நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பெரும்பாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தை போதிய வளர்ச்சி இல்லை என்றால், அதை பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்க வேண்டியிருக்கும். இப்படி அதிகமான ஆபத்துக்காரணிகள் இருக்கின்றன.இரட்டைக் குழந்தை இருக்கும் தாய்மார்கள் அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அடிக்கடி ஸ்கேன் செய்வது, ரத்தசோகை சோதனை போன்றவற்றை காலம் தவறாமல் எடுக்க வேண்டும். பிரசவகால மரணத்தை தவிர்க்க, மூன்றாம் பாதுகாப்பு மையம் (Tertiary Care centre) இருக்கும் மருத்துவமனையாக பார்த்து அட்மிட்டாக அறிவுறுத்துவோம். அதாவது எந்தவிதமான ஆபத்து நிலையையும் சந்திக்கக்கூடிய மருத்துவமனையாக அது இருக்க வேண்டும்.Three person Baby என்றால் என்ன?ஒரு பெண்ணிற்கு கருவுறுதலில் பிரச்னையோ அல்லது மரபணு குறைபாடோ இருந்தால், அந்தப் பெண்ணின் கணவருடைய உயிரணுவோடு, வேறொரு பெண்ணின் தரமான கருமுட்டையை இணைத்து, முதல் நபரின் கர்ப்பப்பையினுள் வைத்துவிடுவோம். இது மைட்டோகாண்ட்ரியல் மாற்று சிகிச்சை செயல்முறை (Mitochondrial replacement therapy method). இதைத்தான் Three Person Baby என்று சொல்கிறார்கள்.இந்த செயல்முறை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் ‘மூன்றாவது பெற்றோர்’ டி.என்.ஏவை ஒரு சிகிச்சையில் அறிமுகப்படுத்துவது, மரபணு மாற்றத்தின் ஒரு வடிவமாகும். இது அடுத்த தலைமுறையினரை பாதிக்கக்கூடும் என்பதால் பல நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள்.மேலும் இந்தத் தொழில்நுட்பத்தில் முதன்முதலாக உக்ரைனில் 2016-ல் ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை தீவிரமான Mitochondrial நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது. Three Person Baby இன்னும் சோதனை அடிப்படையிலேயே இருப்பதால் இன்னும் பலநாடுகளில் நடைமுறைக்கு வரவில்லை.– உஷா நாராயணன்
ட்வின்ஸா இருந்தா பெஸ்ட்…
previous post