ராசிபுரம், ஆக.7: ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல், இவருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸில் டீக்கடை, லாரி புக்கிங் ஆபீஸ், மளிகை கடை என 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர். மறுநாள் காலை 6 கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த, 28ம் தேதி ஆண்டகலூர் கேட் பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த வேலாயுதம் மகன் கிரிதரன்(21) என்பதும், அணைப்பாளையம் பகுதியில் 6 கடைகளின் பூட்டை உடைத்து திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, கிரிதரனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவிய சேலம் சோளம்பள்ளத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் செல்வகணபதி(23), சுரேஷ்குமார் மகன் சதீஸ்குமார் (19) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.