சென்னை, அக்.15: டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக வீடுகள்தோறும் களஆய்வு செய்யும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையினால் தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நாள்தோறும் மாநகராட்சி பணியாளர்களால் வீடுகள்தோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், களப்பணியாளர்கள் மூலமாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை அழித்து, பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தேனாம்பேட்டை மண்டலம், பட்டினப்பாக்கம் பகுதிக்குட்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் கொசு மருந்து அடித்தல் மற்றும் கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணியினை ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி வைத்து, பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அவற்றை உடனடியாக அகற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் புகாதவண்ணம் மூடி வைக்க வேண்டும்.
தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்சாதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வீடுகள்தோறும் களஆய்வு மேற்கொள்ள வரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள 24 ஏக்கர் பரப்பளவிலான காலிமனையில் பொதுமக்களால் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் அடர்ந்திருந்த புதர்செடிகள் ஆகியவற்றை தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், பாப்காட் மற்றும் பொக்லைன் மர அறுவை இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அப்புறப்படுத்தி, அவ்விடத்தில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை ஆணையர் ராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினி மண்டல அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர்.
அபராதம் விதிக்கப்படும்
மாநகராட்சி பகுதியில் கட்டிடக் கட்டுமான பணி நடைபெறும் இடங்களிலும், கட்டிடக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்களிலும், காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கியிருந்து அதன்மூலம் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி இருப்பதை கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என மேயர் பிரியா எச்சரித்தார்.
நிலவேம்பு குடிநீர்
சென்னையில் அதிக காய்ச்சல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ முகாம்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.