மதுரை, ஆக. 24: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க, மாநகராட்சி தடுப்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2023 மே முதல் ஆகஸ்ட் வரை 89 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. மாநகர் நல அலுவலர் வினோத்குமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணிகள் தொர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் 530 பேர் கொண்டு வீடு வீடாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொசு மருந்து புகை பரப்பும் பணிகளும் நடக்கிறது. குடிநீர் தொட்டிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரினேசன் செய்யப்படுகிறது. பொதுமக்களும் தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறத்தை ஏடிஸ் கொசுக்கள் வளராத வண்ணம் பாதுகாக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு வரும் மாநகராட்சி அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.