தேவதானப்பட்டி, ஆக. 24: தேவதானப்பட்டி ரைஸ்மில்தெருவில் அரசு உதவிபெறும் தனியார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 11மணியளவில் பள்ளி இண்டரவல் நேரத்தில், தேவதானப்பட்டி ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்த அழகுராஜா, அம்பிகா தம்பதியின் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ்குமார் என்பவர் பள்ளிக்கு எதிரே உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்குவதற்காக சாலையை கடந்துள்ளார்.
அடையாளர் தெரியாத டூவிலர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியது. இதில் மாணவன் சந்தோஷ்குமாருக்கு நெற்றி மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.