பாடாலூர், செப். 1: தமிழகத்தில் 2024-25 ஆண்டிற்கான அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில், கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் கலைத் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சரோஜாதேவி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
இதில் பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி, மாறு வேடம், நாட்டுப் புறப்பாடல், நடனம், களிமண் பொம்மைகள் செய்தல், கதை சொல்லுதல், போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் முதல், மூன்று இடம் பிடிக்கும் மாணவர்கள் வட்டார அளவிலான நடைபெறும் கலைத் திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஆசிரியர் ராதா, கணினி ஆய்வக பயிற்றுனர் திவ்யப்பிரியா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.