பேரையூர், மே 20: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை திடீரென வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கிடையே சில நேரங்களில் குரங்குகள் குழந்தைகளை தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் டி.கல்லுப்பட்டியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள ராமுண்ணி நகரில் சாப்டூர் வனச்சரகர்கள் கார்த்திக், முத்தரசன் தலைமையிலான வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுக்குள் அமைத்தனர். பின்னர் நீண்ட நேர போட்டத்தின் முடிவில் தாயுடன் சேர்ந்த குட்டி உள்ளிட்ட 7 குரங்குகளைப் பிடித்தனர். அவற்றை வனத்துறை வாகனத்தில் சதுரகிரி மலையடிவாரம் தாணிப்பாறை பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். குரங்குகள் பிடிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், மீதமுள்ள குரங்குகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.