சாயல்குடி, நவ.18: சாயல்குடி அடுத்துள்ள டி.எம்.கோட்டையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பரமக்குடி சுகாதாரத் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ்குமார் உத்தரவுப்படி கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் ஆலோசனைப்படி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, பெருநாழி காவல் ஆய்வாளர் கஜேந்திரன் துவக்கி வைத்தார்.
டி.எம்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து துவங்கிய இப்பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் கிராமத்தில் தெருக்களில் சென்று புகையிலை மற்றும் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர்.
பின்னர் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புகையிலை மற்றும் போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் உடல்நல சீர்கேடுகள் குறித்தும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார பிரச்ணைகள் குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது. பின்னர் புகையிலை ஒழிப்பு உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுசுசுந்தரம், பெருநாழி காவல் உதவி ஆய்வாளர் முகில்அரசன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர், பாலமுருகன், பசும்பொன் மற்றும் சுகாதார செவிலியர்கள் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.