ஆலந்தூர், ஜூன் 8: ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அமர்ந்த பெண் தூக்க கலக்கத்தில் கீழே விழுந்ததில் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பக்கவாட்டு சுவரில் மோதிய ஆட்டோ விபத்துக்குள்ளானது. மீனம்பாக்கத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவரின் ரம்யா (32). இவர், தனது குழந்தைகளான ருத்ரா (12), விக்னேஷ் (8) மற்றும் தங்கைகள் அனிதா (20), ஜோதி (25) ஆகியோருடன் ஒரு ஆட்டோவில் வந்தவாசி அருகே உள்ள மேல்மலையனூர் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும், நேற்று முன்தினம் இரவில் ஆட்டோவில் அவர்கள் திரும்பி வந்தனர்.
நள்ளிரவில் மீனம்பாக்கம் பகுதியில் ஆட்டோ வந்தபோது டிரைவர் இருக்கையில் இருந்த ரம்யா, தூக்க கலக்கத்தில் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த ரம்யாவின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ ஏறி இறங்கியது. பின்னர் சாலை அருகே உள்ள பக்கவாட்டு சுவரில் ஆட்டோ மோதி முன்பக்கம் நொறுங்கியது. சக்கரத்தில் சிக்கிய ரம்யா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அங்கு சென்று ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.