கோவை, ஆக. 12: கோவை மாவட்டத்தில் 970 அரசு பஸ்கள், 250க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இதில் காலை, மாலை, இரவு நேரத்தில் அரசு, தனியார் பஸ்கள் ஒரளவு இயங்கி வருகிறது. ஆனால் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பல வழித்தடங்களில் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்களின் ‘டிரிப்’ குறைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலக்காடு ரோடு, சிறுவாணி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, அவினாசி ரோடு, பொள்ளாச்சி ரோட்டில் 150 முதல் 200 டவுன் பஸ்கள் குறிப்பிட்ட சில மணி நேரம் ‘டிரிப்’ குறைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த நடைமுறையால் பொதுமக்கள், ஏழை எளிய மக்கள் படாத பாடுபடுகின்றனர். 70 சதவீத மக்கள் பஸ் பயணத்தை நம்பியே இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பஸ்சை நம்பியே அதிகளவு வேலைக்கு சென்று வருகின்றனர். மதியம் நேரத்தில் சில பஸ்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு பஸ்களில் மாணவ, மாணவிகள் அதிகம் பயணம் செய்யவேண்டியிருப்பதால் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.