மதுரை, ஆக. 3: திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (33). டிராவல்ஸ் அதிபரான இவர், எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கரிசல்பட்டியைச் சேர்ந்த முத்துச்செல்வம் மற்றும் சசிகரண் ஆகியோர், வாடகைக்கு கார் எடுப்பது தொடர்பாக, கடந்தாண்டு எனக்கு அறிமுகமாகினர். வக்கீல்கள் எனக்கூறிய இருவரும் அரசு கான்ட்ராக்ட் எடுத்து தருவதாக ஆசைவார்த்தை கூறி, ரூ.20 லட்சம் வரை பெற்றனர். அவர்கள் வாயிலாக குலமங்கலத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் அறிமுகமானார்.
அவரது மனைவி ராஜேஸ்வரியும், முத்துச்செல்வம், சசிகரண் மற்றும் முத்துச்செல்வத்தின் உறவினர்களான கண்ணன், ராஜா ஆகியோர் சேர்ந்து, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் பெற்றனர். இவ்வாறு, ரூ.40 லட்சம் வரை பெற்ற அவர்கள், ஆறு பேரும் அரசு கான்ட்ராக்ட் மற்றும் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்தனர். மேலும் கொடுத்த பணத்தை கேட்டபோது எனக்கு, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.