துவரங்குறிச்சி, ஜூன் 28: துவரங்குறிச்சி அருகே டிப்பர் லாரி மோதி விறகு வியாபாரி சம்பவ இடத்திலேயே தலை நசுக்கி பலியானார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு அருகே சின்ன ராக்கம் பட்டி அருகே உள்ள ராக்கன்குளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குளத்தில் இருந்து தூர் வாரிய கிராவல் மணல்களை அள்ளி குளத்தை சுற்றி கரையமைத்து வருகின்றனர். டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றி சென்று குளக்கரையில் கொட்டும் போது எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த சின்னராக்கம்பட்டியை சேர்ந்த விறகு வியாபாரி சின்னப்பன் (35) மீது லாரி ஏறியது.
இதில் சின்னப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த வளநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான சின்னப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.