Sunday, June 22, 2025
Home மருத்துவம்ஆலோசனை டிக் டாக் பெண்களே உஷார்!

டிக் டாக் பெண்களே உஷார்!

by kannappan

நன்றி குங்குமம் தோழிமூன்றாம் உலகப் போருக்கு பலர் பல்வேறு காரணங்கள் சொல்லலாம். அதில் அதிகம் குறிப்பிடுவது டெக்னாலஜி. குறிப்பாக சமூக வலைத்தளங்கள். இதன் மூலம் திரட்டப்படும் தகவல்கள்.  இந்திய பிரதமர் முதல் அமெரிக்க அதிபர் வரை, யார் என்று தீர்மானிக்கும் சக்தியாக இன்று சமூக வலைத்தளங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கும் சமூக வலைத்தளத்தின் புதிய அங்கமாக உருபெற்றிருக்கிறது ‘டிக் டாக்’ எனும் செயலி.  ஆனால், இந்த செயலி வெறும் பொழுது போக்கு அம்சங்களை அடங்கியதாக இருந்தாலும், மக்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இதன் வரவேற்பினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘டிக் டாக்’ எனப்படும் மியூசிக் செயலியில் பாடல்கள், வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் என வயது வித்தியாசம் பாராமல் ஏதோ ஒரு விதத்தில் ‘டிக் டாக்’கிற்கு அடிமையாகியுள்ளனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாகவும் அபாயமானதாகவும் உள்ளன. இவற்றை தணிக்கை செய்வதற்கான சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லாததால் கட்டுப்பாடின்றி இது போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றன. டிக் டாக், வாட்ஸ் அப்களில் ஸ்டேட் டஸ் பதிபவர்கள், செல்ஃபி அதிகம் எடுப்பவர்கள், காணொலி பதிவிடுபவர்கள் ஆகியோரின் மனநிலை என்ன வகை என்பது குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் ஓர் உளவியல் ரீதியான அலசல் இதோ. பொதுவாக தம்மை மற்றவர்கள் முன் வெளிப்படுத்துபவர்களே இதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார் ஐடி துறையில் பணிபுரியும் ரோஷ்னி, “நண்பர்கள் குழுவில் இருக்கும் ஒருவருக்கு சரக்கடிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தாலும், அந்த குழுவில் இருப்பவர்களுக்காக குடிக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார். அதே போன்ற ஒரு போதைதான் இதுவும். எல்லோருமே பண்றாங்க, நாமும் செய்து பார்க்கலாமே என்று சிலர் செய்கிறார்கள். அதில் வரும் லைக்குகளை விரும்ப ஆரம்பித்த பின், அதிலேயே சிலர் மூழ்கி விடுகின்றனர். ஆரம்பத்தில் கிடைக் கின்ற லைக்குகள் போகப் போக கிடைக்காத போது அது வேறு மாதிரி யான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. தங்களது வேலை களிலும், கல்வியிலும் கூட கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு அவர் கள் தள்ளப்படுகின்றனர்” என்கிறார். இந்த ‘டிக் டாக்’  செயலி மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் நடிகை கேபிரியல்லா கூறும் போது, “இந்த செயலி மூலம் பலரது கவனத்தை பெறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. எனவே சமகாலத்தில் இங்கு இருக்கும் பிரச்சினைகளை இந்த சமூகத்திற்கு எடுத்து சொல்வதற்கான ஊடகமாகவே நான் பயன்படுத்தி வருகிறேன். இதன் மூலம் என்னால் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். சிலர் சினிமா மீதுள்ள மோகத்தினால் செய்கிறார்கள். சிலர் எல்லோரும் செய்கிறார்களே நாமும் செய்வோம் என்று செய்கிறார்கள். ஒரு தொழில்நுட்பம் கிடைத்திருக்கும் போது அதை நல்லதுக்கு பயன்படுத்தினால், அந்த தொழில்நுட்பம் கண்டுபிடித்ததற்கான அர்த்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார். இந்தியாவில் 2017 டிசம்பரிலிருந்து 2018 டிசம்பர் வரை மட்டுமே 27 சதவீதத்தினர் டிக் டாக் செயலியை புதிதாக தரவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் கடந்த மாதத்தில் மட்டுமே 32.3 மில்லியன் புதிய தரவிறக்கங்கள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டில் செய்யப்பட்ட தரவிறக்கங்களைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமாகும். தற்போது மொத்தமாக 75 மில்லியன் தரவிறக்கங்கள் புதிதாக நடந்துள்ளன. இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதன் பயன்பாடு அதிக அளவில் கிராமப்புறங்களில் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. மேலும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் ஒரு வெளிச்சமாக இது அமைந்துள்ளது. ஆனால், அதை எந்த அளவிற்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள், எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இதன் நன்மை, தீமைகள் அமையும் என்கிறார்கள். சீனா நாட்டு செயலியான இந்த டிக் டாக்கை  பயன்படுத்தும்போது, செல்போன் ஸ்கிரீனில் ஆபாச வீடியோ குறித்த விளம்பரம் வருகிறது. அதை கிளிக் செய்து உள்ளே செல்பவர்களுக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் அனுப்பப்படுகின்றன. பாடலுக்கு ஏற்ப அசைவுகள் செய்வது மட்டும்தானே என்று ஆரம்பித்து, இளைஞர்களை மற்றொரு பாதைக்கு அழைத்து செல்கிறது ‘டிக் டாக்’ செயலி. நடிகைகள் கூட நடிக்க வெட்கப்படும் ஆபாச காட்சிகளில் எந்த வித கூச்சமும் இன்றி சில இளம்பெண்கள் உடல் அசைவுகளை ஆபாசமாக காட்டி நடித்து வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். நாம் அந்தரங்கமாக கருதும் படுக்கை அறை முதல் கழிவறை வரைக்கும் சென்று அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு பெருமையுடன் அதை வீடியோவாக வெளியிடுகின்றனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு உள்ளது இதில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள். இதற்கு காரணம், இது போன்ற செயலிகளா? அல்லது மக்களின் மனநிலையா? என ஆராய வேண்டியுள்ளது. இதனால்,  குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுவதோடு, குற்ற செயல்களும் அதிகரித்துள்ளன. ‘டிக் டாக்’ செயலியை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள், குறிப்பாக சிறுவர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. இன்னும் சிலர் தங்களின் பெருமையை காட்டி கொள்வதற்காகவே சாதி, மத, அரசியல் உள்ளிட்ட காட்சிகளை வீடியோ எடுத்து அனுப்பி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இப்படி வெளியிடப்படும் ஆபாச வீடியோக்களுக்கும், சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் பகிர்வதாலும், லைக்குகள் குவிவதாலும் இதை ஆஸ்கார் விருது எனக்கருதி தொடர்ந்து நாகரிகத்தை பாழாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விளையாட்டாகத் தொடங்கும் இது போன்ற செயல்கள் எமனாக மாறிடும் வாய்ப்பு உண்டு. இந்தோனேசியாவில் கூட  ‘டிக் டாக்’ செயலி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இந்த செயலியை பயன்படுத்த வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது போல் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்  இந்தியாவிலும் இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இது போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இன்றைய தலைமுறையினர், குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு தானே என்று கருதி நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவலும் விபரீதத்தில்தான் முடியும். முகம் தெரியாதவர்களின் பாராட்டுக்கு ஆசைப்பட்டு உங்கள் தனித் தன்மையை இழந்து விடாதீர்கள்.– அன்னம் அரசு

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi