கடலூர், ஜூலை 31: டிஎன்பிஎஸ்சி பயிற்சி நிறுவனம் நடத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல பேரிடம் ரூ.94 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மணியன் மகன் அன்பழகன்(61). இவருக்கு தனது நண்பரான ரஜினி என்பவர் மூலம் நெய்வேலியை சேர்ந்த புரட்சிக்கதிர் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது புரட்சிக்கதிர் தனக்குத் தெரிந்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் தீனதயாளன் என்பவர், அரசு மருத்துவமனையில் பணிபுரிவதாகவும், அவருக்கு அதிகாரிகள் பலரை தெரியும் என்பதால் பலருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், எனவே உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அரசு வேலை தேவைப்பட்டால் அவரால் வாங்கி தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி அன்பழகன் தனது மகன் வினோத் என்பவருக்கு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளர் வேலைக்கு ரூ.25 லட்சம், மகள் வித்யா என்பவருக்கு ஆசிரியர் வேலைக்கு ரூ.15 லட்சம், மருமகள் அனிதாவிற்கு ஆசிரியர் வேலைக்கு ரூ15 லட்சம் என மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை தீனதயாளன்(43) மற்றும் அவரது மனைவி உஷா(38) ஆகிய இருவரிடமும் கொடுத்துள்ளார். இதையடுத்து தீனதயாளன் போலியான வேலைக்கான உத்தரவை வழங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து அன்பழகன் கேட்டபோது அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அன்பழகன் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தீனதயாளன் மற்றும் அவரது மனைவி உஷாவை நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணையில் தீனதாயளன் மற்றும் அவரது மனைவி உஷா இருவரும் இணைந்து வடலூரில் ஜெயம் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி நிறுவனம் ஆரம்பித்து அதில் படிக்க வரும் நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்று, ஏமாற்றி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
மேலும், புவனகிரியை சேர்ந்த இளம்தமிழன் என்பவரிடம் ரயில்வே துறையில் வேலைக்கு ரூ.13 லட்சமும், சிதம்பரம் தாலுகா அள்ளூரை சேர்ந்த மகாசங்கு என்பவரிடம் இந்து அறநிலைய துறையில் வேலைக்கு ரூ.5 லட்சமும், அவரது மனைவியான விமலா ரமணி என்பவருக்கு வருவாய் துறையில் இளநிலை உதவியாளர் வேலைக்கு ரூ.6 லட்சமும், சிதம்பரம் தாலுகா அள்ளூரை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.5 லட்சமும் மழவராயநல்லூரை சேர்ந்த தமிழ்மணி என்பவரிடம் ரூ.4 லட்சமும், ரூபா என்பவரிடம் ரூ.6 லட்சமும் என மொத்தம் ரூ.39 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.