திருப்பூர், அக்.27: திருப்பூரில் போக்குவரத்து நிறைந்த நகர சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலங்களை பயன்படுத்தாமல், ஆபத்தான முறையில் பொதுமக்கள் சாலையை கடக்கின்றனர். இதற்கு பதிலாக சுரங்கப்பாதைகளை அமைக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த திருப்பூர் மாநகரில் புஷ்பா தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், டவுன்ஹால் நல்லுார், பார்க் ரோடு ஆகிய இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதசாரியாக வரும் மக்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், சாலையை கடந்து செல்வதற்காக தான், நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் நடைமேம்பாலங்களை பயன்படுத்துவதில்லை. மாறாக சாலை மார்க்கமாகவே கடந்து செல்கின்றனர்.
இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலங்கள் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘15 முதல், 20 அடிக்கும் உயரமான நடை மேம்பாலத்தின் மீது ஏறி, மறுபுறம் சாலைக்கு செல்வதற்கான பொறுமை மக்களிடம் இல்லை. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள் நடைமேம்பாலத்தில் உள்ள படிக்கட்டுகளின் மீது செல்வதற்கு தயாராக இல்லை. அவர்கள் உடல் ஒத்துழைத்தாலும், மனம் விரும்புவதில்லை என்பதே யதார்த்தம். இதுபோன்ற நிலையில், நடை மேம்பாலங்கள் வீணாக கிடக்கின்றன. இதற்கு பதிலாக சுரங்கப்பாதைகளை அமைக்கலாம்’’ என்றனர்.