தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, இணைய வசதி மற்றும் 20க்கும் மேற்பட்ட இணைய வசதியுடன் கூடிய கணிணி இயங்கி வருகிறது. இந்த மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, 2023-24ம் ஆண்டு குரூப்-4 தேர்விற்கு 70 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில், தர்மபுரி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று 15 மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்து உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சதீஷ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா உடனிருந்தார்.