நெல்லை, ஜூன் 16: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. நெல்லையில் 5 ஆயிரத்து 547 பேர் குரூப்-1 தேர்வை எழுதினர். 2023 பேர் தேர்வு எழுத வரவில்லை. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 70 இடங்களுக்கும், 2 உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வு எழுதினர். 987 தலைமை கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்காணித்தனர்.
நெல்லை கோட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி, ஓயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏஞ்சலோ மெட்ரிக் பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, மேக்தலின், சின்மயா, விவேகானந்தா மெட்ரிக் பள்ளிகள், பாளை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, பாளை ஜான்ஸ் கல்லூரி, சேவியர் மேல்நிலைப்பள்ளி, தருவை எப்.எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, மேலத்திடியூர் பிஎஸ்என் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட 28 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத விண்ணப்பித்த 7120 விண்ணப்பதாரர்களில் 5206 பேர் தேர்வு எழுதினர். 1914 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதுபோல் சேரன்மகாதேவி கோட்டத்தில் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவந்தி மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்த 450 பேரில் 341 பேர் தேர்வு எழுதினர். 106 பேர் தேர்வு எழுத வரவில்லை. நெல்லை, சேரன்மகாதேவி கோட்டங்கள் சேர்த்து ஒட்டு மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 7570 பேரில் 5547 பேர் தேர்வு எழுதினர். 2023 பேர் தேர்வு எழுத வரவில்லை. 73 சதவீத பேர் இத்தேர்வை நெல்லை மாவட்டத்தில் நேற்று எழுதியுள்ளனர். 26 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் குரூப் 1 மற்றும் 1 ஏ முதல்நிலை தேர்வு எம்கேவிகே பள்ளி, ஆக்ஸ்போர்டு பள்ளி, செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக், பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி, பாரத் பள்ளி, இசக்கி வித்யாஷ்ரம், குற்றாலம் பராசக்தி கல்லூரி உள்ளிட்ட 18 மையங்களில் நடந்தது. இதில் 4,328பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 1,277பேர் தேர்வு எழுத வரவில்லை. நெல்லை தேர்வு மையம் உள்பட தமிழகத்தில் அனைத்து மையங்களிலும் நேற்று காலை 9.30 மணிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தொடங்கியது. ஒருமணி நேரம் முன்னதாக 8.30 மணிக்கு மையத்தில் இருக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலர் மையத்திற்கு லேட்டாக 8.55 மணிக்கு வந்த விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பதாரர்கள் வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பல ஆண்டுகள் இடைவெளியில் குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் அரைமணி நேர தாமதத்திற்கு அனுமதி மறுப்பதாக கூறி கொண்டு ஆவேசத்தோடு வெளியேறினர். பாளை ஜான்ஸ் பள்ளியில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.