சேலம், ஜூன் 16:சேலம் மாவட்டத்தில் 41 மையங்களில், நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை 10,965 பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 1 நிலை பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, இத்தேர்வினை எழுத 14,291 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் உள்ள 41 பள்ளி மற்றும் கல்லூரி மையங்களில், 55 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தன.
இத்தேர்வினை கண்காணிப்பதற்காக 14 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. அத்துடன், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக ஏராளமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடவடிக்கைகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. இத்தேர்வில் 10,965 தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர்.
விண்ணப்பித்திருந்தவர்களில் 3,326 பேர் தேர்வை எழுத வரவில்லை. சேலம் ஏற்காடு அடிவாரம் தனியார் பள்ளி மையத்தில் கலெக்டர் பிருந்தாதேவி தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிந்தது. முன்னதாக காலை 8.30 மணிமுதலே தேர்வுகள் தேர்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம், காலை 9 மணிக்கு பின்னர் வந்த தேர்வுகள், உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.