கோவை, ஜூலை 14: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 முதல்நிலை எழுத்துத் தேர்வை 6,955 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பிரதான தேர்வில் துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர் (வணிக வரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவு), உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணிக்கு 90 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து, மாவட்ட தேர்வு பிரிவு அதிகாரிகள் கூறும்போது,“கோவை மாவட்டத்தில் 11455 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் 13 இடங்களில் 38 மையங்களில் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், 6,955 பேர் (60 சதவீதம்) கலந்து கொண்டு தேர்வெழுதினர். 4,500 பேர் தேர்வெழுத வரவில்லை’’ என்றனர்.