விருதுநகர், ஜூன் 24: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, ரேஷன் கார்டு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று டிஆர்ஓ கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் காளிமுத்து மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.