வேலூர், அக்.26: வேலூர், ராணிப்பேட்டடை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க 106 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2000 கடைகளில்தான் பார்கள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள மதுக்கடைகளில் பார்கள் கிடையாது. விதிகளை மீறி அங்கு பார்கள் செயல்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகின்றன. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு கடந்த 7ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களுக்கு http://tntenders/gov.in/nicgep/app என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேலூர், திருப்பத்தூர் உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் மாவட்டம், ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள பார்களை ஏலம் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய தெரிவிக்கப்பட்டது. வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் 56 பேரும், ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்டத்தில் 50 பேர் என மொத்தம் நேற்றைய நிலவரப்படி 106 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். டாஸ்மாக் பார்களை ஏலம் எடுப்பதற்கு விண்ணப்பிக்க நாளை பிற்பகல் 2 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏலம் எடுக்க விண்ணப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்பள்ளிகள் நாளை மாலை 4.30 மணிக்கு, பார் ஏலம் எடுத்தவர்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.