திருப்பூர், ஜூன் 5: திருப்பூர், நொச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் இரவு இவரது நண்பர் விமல்ராஜ் என்பவருடன் மணிகாரம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது டாஸ்மாக் பாரில் நிறுத்தப்பட்டிருந்த நிர்மலின் இருசக்கர வாகனம் காணாமல் போனது குறித்து நிர்மலுக்கும் பார் ஊழியர்களான வேலாயுதம் (40), மணிகண்டன் (23) ராமச்சந்திரன் (37) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து காணாமல் போன வாகனம் குறித்து விசாரணை செய்ய நிர்மல் சிசிடிவி கேமரா காட்சிகளை கேட்டபோது அதனை கொடுக்க மறுத்து ராமச்சந்திரன், வேலாயுதம், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து நிர்மலையும் அவரது நண்பர் விமல்ராஜையும் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த நிர்மல் மற்றும் விமல்ராஜ் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து வேலாயுதம், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நிர்மல், விமல்ராஜ், யாசர் அராபத் ஆகியோர் மீது வழக்கு பதிந்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.