சேத்தியாத்தோப்பு, அக். 27: சேத்தியாத்தோப்பு-சிதம்பரம் பிரதான நெடுஞ்சாலையோரம் கிளியனூர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. தினந்தோறும் இந்த சாலையின் வழியே ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் குடிமகன்கள் சாலையிலேயே ஆபாச வார்த்தைகள் பேசியபடி நின்றுகொண்டு இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. டாஸ்மாக் கடையின் எதிரே விளை நிலங்கள் உள்ளதால், பயிரிட்டுள்ள நெற்பயிர்களில் காலி மதுபாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.