திருப்பூர், ஜூன் 19: திருப்பூர் எஸ்ஆர் நகர் வடக்கு பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு அலங்கோலமாக கிடக்கின்றனர். மேலும் சில நேரங்களில் பெண்களை கேளி கிண்டலும் செய்தும் வருகின்றனர். இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி குடியிருப்போர் நல அலுவலகத்தில் திரண்டு அங்கிருந்து டாஸ்மாக் கடை வரை ஊர்வலமாக சென்று கோஷம் எழுப்பி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் கடை வளாகத்தில் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதமானது. இதனைதொடர்ந்து நொய்யல் புது சாலையில் அமர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய முறையில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். எனினும் கடை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 83 மத்திய போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.