நாகர்கோவில், ஜூலை 29: குமரியில் டாஸ்மாக் கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அமல் படுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு நேரடியாக நடத்துவதாக அறிவித்த நிலையில், தனியார் மதுபான கடைகளில் பணியாற்றியவர்கள் டாஸ்மாக் பணியில் சேர்ந்தனர். ஆரம்பத்தில், 2 ரூபாய் மற்றும் 3 ரூபாய் சில்லரை இல்லை எனக்கூறி தனியார் கடைகளில் இருந்து வந்தவர்கள் லாபம் பார்த்தனர். பின்னர், இது படிப்படியாக பிற ஊழியர்களிடமும் பரவியது. இதுகுறித்த புகார்களை அடுத்து தமிழக அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தும் போது, விலையை 5 ஆகவும் பின்னர் 10 ஆகவும் ரவுண்ட் செய்தனர். தற்போது குவாட்டர் மது பாட்டிலுக்கு ₹5 முதல் ₹10 வரை கூடுதலாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. முன்பு குறைந்த விலை மதுபானங்களுக்கு மட்டும் வசூலித்தனர். ப்ரீமியம் வகை மது பாட்டில்கள் விற்பனை விலைக்கே விற்கப்பட்டன. ஆனால், தற்போது எந்த வகை மது என்றாலும், குவாட்டருக்கு 5 முதல் 10 வரை கட்டாயம் தந்தாக வேண்டும். புல் பாட்டில் என்றால், ₹20 முதல் ₹40 வரை கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே கேரளா போன்று மதுபானத்திற்கு பணம் செலுத்தி ரசீது பெற ஒரு கவுண்டரும், ரசீதை தந்து மதுபாட்டில்களை பெற்று செல்ல மற்றொரு கவுண்டரும் அமைக்கவேண்டும் என்று கோரிக்ைக எழுந்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் முத்துசாமி, மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்ைக பாயும் என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பயனில்லை. இதனையடுத்து பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும், அனைவருக்கும் ரசீது வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.
இதன்படி அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகங்களுக்கும் மாதிரி க்யூஆர் கோடு உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மதுபானங்களின் விலையை கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது வழங்குவதுடன், அங்குள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை யூபிஐ மூலம் செலுத்த வேண்டும். பின்னர், ரசீதை தந்து மதுபாட்டில்களை பெற்று செல்லும்வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கு கடைகளில் இரு கவுண்டர் அமைத்தல், மற்றும் வரிசையில் மது பிரியர்கள் நிற்கும் இடவசதி போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது, மதுபாட்டில்களை இறக்கும்போது, இறக்கு கூலி, கூடுதல் மின்கட்டணம், கடை வாடகை, உடைந்த மதுபாட்டில்களுக்கு உரிய பணம் ஆகியவற்றை டாஸ்மாக் ஊழியர்கள் தான் செலுத்தி வருகின்றனர். இந்த செலவுத் தொகையை பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கும் பணத்தில் சரி செய்கின்றனர். ஆனால், பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்க கூடாது என்றால், இந்த செலவுகளை யார் செலுத்துவார்கள் என்ற கேள்வியும் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுபற்றி டாஸ்மாக் நிர்வாகமும் டெட்ரா பேக் மற்றும் பெட் பாட்டில்களில் மதுபானங்களை விற்பனை செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.