கோவை, செப். 3: கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தலையில் காயத்துடன் வாலிபர் ஒருவர் சிகிச்சை பெற வந்தார். இருதரப்பு இடையே மோதலின்போது அவர் தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அங்கு பணியில் இருந்த பயிற்சி டாக்டர் சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் டாக்டரிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனை காவலாளியான வெள்ளலூரை சேர்ந்த ஜீவா (30) என்பவரை டாக்டர் அழைத்தார். அவர் அங்கு சென்று வாலிபரை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஜீவாவையும் அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார். தொடர்ந்து அவர் ரகளையில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவலாளி ஜீவா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட சலீவன் வீதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.