*இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 39 ‘‘தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்று மக்களால் பல காலமாகச் சொல்லப்படுகின்ற வாசகமே எல்லோருக்கும் ஒரு புதிய தெம்பைத் தருகின்றது. தை மாதம் பூவுலகில் உள்ள நமக்குமட்டுமல்ல, வானில் வலம் வரும் சூரியனுக்கும் ஒரு புதிய வழியைத் தோற்றுவிக்கிறது. ஆம் ! ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உலா வரும் சூரியன் தை முதல் நாள் தொடங்கி வடக்கு திசை நோக்கிப் பயணிக்கின்றான்.உத்தராயண புண்ணிய காலம் என்று தை மாதத் தொடக்கம் சிறப்பிக்கப்படுகின்றது. ஆரம்ப நாளிலேயே அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். பூவுலகைத் தான் பொற் கிரணங்களால் புனிதப்படுத்தும் சூரிய தேவனுக்கு அவன் விளைவித்த தானியங்களால் நன்றி செலுத்துகின்றோம்.பொற்கதிரை நெற்கதிரால் வணங்குகின்ற இந்தப் பொன்னான பொழுதில் சூரியனை வாழ்த்துவது நம் கடமை அல்லவா !கவியரசர் கண்ணதாசன் கதிரவனை ஏற்றிப் போற்றுகிறார்.ஆயிரம் கரங்கள் நீட்டிஅணைக்கின்ற தாயே போற்றி !அருள் பொங்கும் முகத்தைக் காட்டிஇருள் நீக்கும் தந்தாய் போற்றி !தாயினும் காலப் பரிந்துசகலரை அணைப்பாய் போற்றி !தழைக்கும் ஓர் உயிர் கட் கெல்லாம்துணைக்கரம் கொடுப்பாய் போற்றி !தூயவர் இதயம் போலதுலங்கிடும் ஒளியே போற்றி !தூர்த்தே நெருப்பை வைத்துசாரத்தைத் தருவாய் போற்றி !ஞாயிறே நலமே வாழ்க !நாயகன் வடிவே போற்றி !நானிலம் ஊநாள் மட்டும்போற்றுவோம் ! போற்றி போற்றி ! ஆதிசங்கரர் இந்து மதத்தின் சிறப்பாக ஆறு நெறிகளை வகுத்தார். ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று அதனாலேயே அவரைப் போற்றுகின்றோம். கணபதியை வழிபடுவது காணாபத்யம், சிவபெருமானைத் தொழுவது சைவம், விஷ்ணுவைப் பணிவது வைணவம்,சக்தி தேவியைப் போற்றுவது சாக்தம், குமரனைக் கொண்டாடுவது கெளமாரம் இவ்வரிசையில் பார்வைக்குத் தெரியும் பரம் பொருளான சூரியனை வாழ்த்தித் தொழுவது சௌரம் என வகுத்தார் ஆதி சங்கர்.ஆறு சமய வழிபாட்டில் நம்மவர்கள் கண்களால் காணக்கூடிய கடவுளாகச் சூரியன் மட்டுமே தோன்றி அருள் புரிகின்றார். மந்திரங்களில் முடி மணியாகத் திகழ்கின்ற சகாயத்ரிமந்திரம்’ சூரிய தேவனைப் போற்றும் மந்திரமே.இம் மகா மந்திரத்தை மகா கவி பாரதியார் தன் இயற்றிய பாஞ்சாலி சபத காவியத்தின் இடையே தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் !அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக! பிரபஞ்சத்தின் மூல ஒளியாகப் பிரகாசிக்கின்றார் சூரிய பகவான். நம் பார்வையில் தெரிகின்ற பரம்பொருளாக சூரியன் தெரிவது மட்டும் அன்றி பார்க்க வைக்கின்ற சக்தியையும் நம் கண்களுக்குக் கதிர் ஒளியே வழங்குகின்றது.‘அவன் அருளாலே அவன் தான் வணங்கி’ என் கிறவாசகம் நூற்றுக்கு நூறு சூரிய வழிபாட்டின் பெருமையைப் பறை சாற்றுகின்றது.கதிர் ஒளி இல்லையேல் கண் ஔியும் இல்லை.‘காண்பானும், காட்டுவிப்பானும், காட்சியும், காட்சிப் பொருளும் அனைத்துமே இறைவன்’ என்ற கந்த புராணத்தின் தத்துவத் தொடரினை மெய்ப்பிப்பதே சூரிய வழிபாடு.மகாகவி பாரதியார் கூறுகின்றார் .‘ நீ ஒளி! நீ கடல்! நீ விளக்கம் ! நீ காட்சி.இளங்கோவடிகள் மொழிகின்றார்.‘‘ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !காவிரி நாடன் திகிரி போல் பொற் கோட்டுமேரு வலம் திரி தலான் !சங்க இலக்கியத்தின் கடவுள் வணக்கமாகவே திகழ்கின்றது நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. அவ் ஆற்றுப்படையின் தொடக்க வரிகள்…உலகம் உவப்ப வலன் ஏர்பு திரி துருபலர் புகழ் ஞாயிறு’ – என்று கதிரவனைச் சிறப்பிக்கின்றது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அருண பகவான் சாரதியாய் அமர ஆதித்தன் வலம் வருகின்றான். இச்செய்தியை அருணகிரியார் அதி அற்புதமாகப் பாடுகிறார்.‘மரகத. அருண குலதுரக உபலளித கனகரத’ என்றும் ‘ஏழு பரி ரதத்து இரவு’ என்றும் அவர் திருவகுப்பில் பாடுகின்றார். ஏழுநிறக் குதிரை என மெய்ஞானம் சொன்னது விஞ்ஞானம் மூலமும் வானவில்லின் ஏழுநிறம் (VIBGYOR) என உறுதிப்படுத்தப் படுகின்றது.பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தை கிருத்திகை, தை அமாவாசை, ரத சப்தமி, தைப் பூசம் என இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் விழாக்களின் வரிசை. விமரிசையாகத் தொடர்கிறது.சூரிய தேவனின் இந்த வடக்கு வழிப் பயண காலத்தில்தான் உயிர் பிரிய வேண்டும். இதுவே உத்தமமான புண்ணிய காலம் என அம்புப் படுக்கையில் பீஷ்மப் பிதாமகர் இந்த அரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் என மகாபாரதம் கூறுகின்றது.ராமாயணத்திலும் ராவணனை வதம் செய்யும் வலிமையை அகத்தியரால் அறிந்து கொண்ட ஆதித்திய ஹிருதயம்’ ஜபித்தே ராமபிரான் பெற்றார். குந்திதேவி வள்ளல் கர்ணனையும், திரௌபதி அமுத கரடரியான அட்சய பாத்திரத்தினையும் சூரிய தேவனை வழிபட்டே அவன் அருளாலே அடையப் பெற்றனர்.இவ்வாறு எண்ணற்ற பெருமைகள் பெற்ற சூரியனை வழிபடுவது உடல் நலத்திற்கும், மனத் தெளிவிற்கும், கண் ஒளிக்கும், தேக நிறத்திற்கும் மூல காரணமாக அமையும். நாம் வாழும் பூமியே கதிரவனிலிருந்து வெடித்து வந்த ஒரு பகுதி தான் என அறிவியல் கூறுகிறது. அப்படி என்றால் பூ மண்டலத்தின் தாயாக விளங்கி கண்ணும் கருத்துமாக அன்னை எப்படி அரவணைப்பாளோ அப்படி சூரிய மண்டலம் நம்்மைப் பாதுகாக்கிறது.அதனால்தான் பாரதியார் இப்படி பாடுகின்றார். பரிதியே ! பொருள் யாவிற்கும் முதலே !பானுவே ! பொன் செய் பேரொளித் திரளே !கருதி நின்னை வணங்கிட வந்தேன்.தமிழகத்தில் சூரியனார் கோயில், ஒரிசாவில் ‘கொனார்க்’ ஆலயம் இரண்டும் பிரசித்தி பெற்ற பிரத்யட்ச கடவுளான பிரபஞ்ச ஜோதி சூரியனுக்கு உகந்த கோயில்களாகும்.சூரிய தேவனின் அருளால் விசுவாமித்திரர் காயத்ரி மந்திரத்தையும், யாக்ஏவல் கியர் சுக்ல யஜீர் வேதத்தையும், மயூரகவி ஸமஸ்கிருதத்தில் சூரிய சதகத்தையும் அருளினர்.அனைத்திற்கும் மேலாக நம் அன்னைத் தமிழ் மொழியில் சூரியனின் புகழ் பாடுவதற்கென்றே ஒரு நூல் ஆயிரம் பாடல்கள் கொண்டது வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடியது.‘ஞாயிறு ஆயிரம்’ என்ற அந்நூல் போல் எம் மொழியிலும் சூரிய இலக்கியம் வேறு இல்லை.ஒப்பில் மாருதிக்கு ஒன்பது இலக்கணம்செப்பி ஆண்ட திவாகர மூர்த்தியே !என்று தண்டபாணி சுவாமிகள் ஞாயிறு ஆயிரம் நூலில் அனுமனுக்கு அனைத்து கலைகளையும் கற்பித்த ஆசான் என ஆதவனைப் போற்றுகிறார். நவீன யுகத்தில் Solar Power – சூரிய சக்தியால் நாம் பெறும் பலன்கள் ஏராளம்.தைப் பொங்கல் நன்னாளில் காசினியைக் காத்து மழை வளத்திற்கும், தானியவிளைவிற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் அடிப் படையாக – ஆதார சக்தியாக நன்றிப் பொங்கலை சூரிய தேவனுக்குப் படைத்து மகிழ்வோம்.திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன் …