ஜெயங்கொண்டம்,செப்.13: ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி பகுதிகளில் நேற்று மாலை 4 நான்கு மணிக்கு கனத்த மழை பெய்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மிகுந்த வெப்பமும் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. பகல் நேரங்களில் அதிக அளவில் வெப்பம் இருந்து வந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி, அணைக்கரை பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்தது.
மீன்சுருட்டி மற்றும் இதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் சம்போடை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தகர சீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை உள்ளேயும் மழை சாரல் முழுவதுமாக புகுந்தது. இதனால் மழைக்கு ஒதுங்கிய பொதுமக்கள் முழுமையாக நனைந்தனர். சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடத்தொடங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.