ஜெயங்கொண்டம், ஜூன் 27: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவம் குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்ததது. இதனையடுத்து, போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியாக ஒரே வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் ஓட்டி வந்த வாகனமும் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுக்கா கண்டமங்கலம் வெட்டுவாய்க்கால் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) மற்றும் அரியலூர் மாவட்டம் தழுதாழைமேடு காலனி தெருவை சேர்ந்த ராஜவேல் (22) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் விக்ரமங்கலம், கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.