ஜெயங்கொண்டம், ஆக.2: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி மகன் விஜய்(28). இவரது சித்தப்பா தமிழரசன் என்பவர் காடுவெட்டாங்குறிச்சி ராஜாங்கம் மகள் சித்ரா என்பவரை திருமணம் செய்து குடும்பத்துடன் காடுவெட்டாங்குறிச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசனுக்கும் அவரது கொழுந்தியா மருமகன் ராஜேந்திரனுக்கும்(37) குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பின்னர் தமிழரசனுடைய வீட்டின் பொருட்களை ராஜேந்திரன் அடித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழரசன் போன் மூலம் விஜய், வீரமணியை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு வந்து இருவரும் சம்பவம் குறித்து கேட்டு கொண்டிருந்தபோது ராஜேந்திரன், வேல்முருகன் (41) ஆகியோர் சேர்ந்து விஜய்யை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து விஜய் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.