ஜெயங்கொண்டம், அக்.20: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் மெயின்ரோட்டு தெரு மற்றும் அங்காளம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு குடிப்பதற்கும், சமைக்க மற்றும் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இது பற்றி மாவட்ட கலெக்டரிடமும், சிஎம் செல் பிரிவிற்கும் , தஞ்சாவூர் ஆர்டிஎம்ஏ அலுவலகம் குடிநீர் நீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். தண்ணீருக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பள்ளிக்கு குழந்தைகளை காலதாமதமாக அனுப்பும் நிலை இருந்து வருவதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலை மறியலால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.