ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராஜபிரியன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில் 0 – 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ காப்பீடு தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல் யூடிஐடி பதிவு மற்றும் புதுப்பித்தல், இலவச ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை வழங்குதல், உதவி உபகரணங்களுக்கான பதிவு,உதவி தொகைக்கான பதிவு, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்தல் முதலானவைகளில் பயனாளிகள் பயன்பெற்றனர். மேலும் காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் நிபுணர் எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மருத்துவ உதவிசார்ந்த ஆலோசனைகளையும் வழங்கினர். முகாமில் சுமார் 200 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.