ஜெயங்கொண்டம், ஜுன் 2: ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து, தமிழ்மறவன் தலைமையிலான பாமகவினர் 47 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாமகவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அணி, அன்புமணி ராமதாஸ் அணி என 2 அணிகளாக சுறுசுறுப்பாக செயல் பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியில் 16 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 4 மாவட்ட தலைவர்களை மாற்றி புதிய பொறுப்பாளர்களை நியமித்து டாக்டர் ராமதாஸ் உத்தரவுகளை வழங்கினார். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் தற்போது டாக்டர் ராமதாசால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த காடுவெட்டி ரவியை மீண்டும் மாவட்ட செயலாளராக நியமித்த நிலையில் தற்போது ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் காடுவெட்டி ரவி தலைமையில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
அதில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட அரியலூர் பாமக மாவட்ட செயலாளர் தமிழ்மறவன், மற்றும் மாநில அமைப்பு தலைவர் டிஎம்டி திருமாவளவன் ஆகியோர் தலைமையிலான பாமகவினர் ஜெயங்கொண்டம் நகரத்தில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட நகர செயலாளர் மாதவன் தேவா முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு கலந்து கொள்ள முயற்சித்தனர்.
அப்போது பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி 47பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.