திருச்செந்தூர், ஜூன் 17: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக கோயில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அத்துடன் இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருகைதரும் பக்தர்கள் கோயிலில் நெருக்கடியின்றி வந்து செல்வதற்கான வழி, போக்குவரத்து வசதி, நடந்து செல்லும் பாதை, வாகன நிறுத்தம் ஆகியன போக்குவரத்து காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.
இவ்வாறு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வு செய்ய தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் நேற்று மாலை திருச்செந்தூர் கோயிலுக்கு வருகைதந்தார். இதைத்தொடர்ந்து திருக்கோயில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது ஏடிஎஸ்பி திபு, திருக்கோயில் இன்ஸ்பெக்டர் கனகராஜன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.