பாலக்காடு, ஜூன் 2: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பற்றா அருகே கம்பளங்கோடு பள்ளிவாசல் அருகே ஜீப் மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்பற்றா அருகே கம்பளங்கோட்டை சேர்ந்த ஹாசிம் ஆயிஷா தம்பதியினர் மகள் தில்ஷானா (19). இவர் சுல்தான் பத்தேரியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வந்தார். இவர் வீட்டின் முன்பாக சாலையோரம் பால் வாங்குவதற்காக நின்றிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த ஜீப் மாணவி மீது மோதியது. இதில், மாணவி தில்ஷானா படுகாயமடைந்தார். தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி தில்ஷானா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கல்பற்றா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால்வாங்க சென்ற கல்லூரி மாணவி ஜீப் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.