புதுச்சேரி, ஜூலை 2: புதுச்சேரியில் சிறுமி கடத்தல் வழக்கில் ஜிபேவில் லஞ்சம் பெற்றதாக சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் முகமதுரபீக், ஷர்மிளா தம்பதியினர். இவர்களது மகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காணவில்லையென வில்லியனூர் காவல் நிலையத்தில் ஷர்மிளா புகார் அளித்தார். அப்போது அங்கு உதவி சப்- இன்ஸ்பெக்டராக, பணிபுரிந்த சரண்யா புகாரை பெற்று கொண்டு, விசாரணை நடத்தியதில், கேரளாவை சேர்ந்த வாலிபர் ஷர்மிளாவின் மகளுடன் இன்ஸ்டாகிராமில் பேசி, பழகி அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் வடமாநிலத்துக்கு அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே துபாயில் இருந்து புதுச்சேரி வந்த ஷர்மிளாவின் கணவர் முகமது ரபீக் காவல் நிலையம் சென்று, தனது மகளை விரைந்து மீட்டு தர சப்-இன்ஸ்பெக்டர் சரண்யாவிடம் கூறியுள்ளார். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிகிறது. தொடர்ந்து செல்போன் சிக்னலை வைத்து, சிறுமி அசாமில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா, சிறுமியை மீட்க அசாம் மாநிலத்துக்கு செல்ல வேண்டும் அதற்கு ரூ. 10 ஆயிரம் வழி செலவுக்கு தேவைப்படுவதாக முகமது ரபீக்கிடம் கேட்டுள்ளார். இதற்கு தன்னிடம் ரூ. 5 ஆயிரம்தான் இருப்பதாக கூறி அதனை ஜிபே மூலமாக சரண்யாவுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் சரண்யா தலைமையிலான தனிப்படையினர், அசாம் சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததோடு, சிறுமியை கடத்திய வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா சிறுமியின் தந்தை ரபீக்கிடம் ஜிபே மூலமாக பணம் பெற்ற ஸ்கிரீன் ஷாட்களுடன் அவரது குடும்பத்தினர் காவல் துறை தலைமையகத்தில் புகார் அளித்தனர். இத்தகவலால் அதிர்ச்சியடைந்த சரண்யாவின் கணவரும், பாகூர் சப்-இன்ஸ்பெக்டருமான பிரபு ரூ. 5 ஆயிரத்தை ரபீக் ஜிபே எண்ணுக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த புகாரின் பேரில் போலீஸ் ஆப் போலீஸ்( போலீசார் மீதான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு) துறை ரீதியான விசாரணை நடத்தியது. இதற்கான முழு விபரங்களை பெற்று தலைமை செயலர் தலைமையில் செயல்படும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகம் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை ரபீக்கிடம் புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜிபே மூலம் லஞ்சம் பெற்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியினர் லஞ்ச வழக்கில் சிக்கி இருப்பது காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.