சாஹிப்கஞ்ச்: ஜார்கண்டில் திருமணமான சில நாட்களில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவன், உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டம் போரியோ பகுதியை சேர்ந்த தில்தார் அன்சாரி (25) என்பவர், அவரது மனைவியான பழங்குடியினத்தை சேர்ந்த ரூபிகா பஹாடின் (22) என்பவருடன் வசித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் போரியோ சந்தாலி பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில், மனித கால் துண்டுகளை அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் இழுத்து சென்றன. அதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார், அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் உடல் என்று உறுதிசெய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சாஹிப்கஞ்ச் போலீஸ் எஸ்பி அனுரஞ்சன் கிஸ்போட்டா கூறுகையில், ‘பழங்குடியினத்தை சேர்ந்த ரூபிகா பஹாடினுக்கும், தில்தார் அன்சாரிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் ரூபிகா பஹாடின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன. நாய்கள் அவற்றை இழுத்து சென்றன. மார்பு மற்றும் உடலின் மற்ற பாகங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தன. பெண்ணின் தலை மற்றும் சில உடல் பாகங்கள் இதுவரை மீட்கப்படவில்லை. விசாரணையில் ரூபிகா பஹாடினை அவரது கணவனான தில்தார் அன்சாரி மற்றும் சிலர் கொன்று துண்டு துண்டாக வீசி எறிந்துள்ளனர். தும்காவிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பின் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள உடலின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எத்தனை நாட்களுக்கு முன்பு கொலை நடந்தது? கொலைக்கான முக்கிய காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது’ என்று கூறினார்….