திருவண்ணாமலை, ஜூன் 5: ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கலெக்டர் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, மலைவாழ் மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை பேரெழில் நிறைந்த ஜவ்வாதுமலையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழா வரும் 21ம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதையொட்டி, விழாவுக்கான முன்றேன்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்த இரண்டாவது கட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அரசுத்துறைகளின் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சிகள் இரண்டு நாட்களும் நடத்த வேண்டும். அதில், பொதுமக்கள் அரசு திட்டங்களை தெரிந்துெகாள்ள வசதியாக காட்சிப்படுத்த வேண்டும். மேலும், மழைவாழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் நலத்திட்டங்களை பெறும் வகையில், ஒவ்வொரு துறையின் சார்பிலும் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், திருண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும் ஜவ்வாதுமலை கோடை விழா சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். பொழுது போக்கு அம்சங்கள்், பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றார்.