திருப்பூர்: ஜவுளித்தொழிலை மேம்படுத்த நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஸ் தெரிவித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன், ஒன்றிய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருமுருகன் பூண்டியில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், ஒன்றிய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஸ் பேசியதாவது: நாட்டின் 75 ம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் வேளையில், பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஜவுளித்துறையில் செய்யவேண்டிய திட்டங்கள் குறித்து யோசிக்கிறார். அதன் ஒரு பகுதியாக, ஜவுளித்துறையில் கோலோச்சும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். திருப்பூரின் ஏற்றுமதி மற்றும் தொழில் நிலைகள் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது. தொழில் அமைப்புகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகம், உலகளாவிய பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு பல்வேறு பிரத்யேக திட்டங்களை உருவாக்கவும் இந்த சந்திப்பு உதவும். மேலும், தேசிய அளவில் 7 ஜவுளித்துறை பூங்காக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு இருக்கும். பொது சுத்திகரிப்பு நிலையம், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி என திருப்பூர் ஜவுளித்தொழிலை மேம்படுத்த அனைத்து அம்சங்களும் உள்ளன. சில திட்டங்களில் தடையின்மை சான்று கிடைக்கும்போது, தொழில் நகரங்கள் மேலும் வேகமாக வளரும். இதையொட்டி, ஜவுளித்துறையை மேம்படுத்த எதிர்கால ஜவுளித்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர திட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும். இது ஜவுளித்துறைக்கு பெரிதும் பலன் அளிக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்….