திருவாடானை, ஆக.28: திருவாடானை, எம்ஜிஆர் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் நகர் முதல்வீதி செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
இதனால் தினசரி இந்த சாலையில் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள் பதம் பார்ப்பதால் அப்பகுதியில் உள்ள அனைவரும் ஒருவித அச்சத்துடன் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சேதமடைந்த சாலையின் வழியாக செல்லும் பெண்கள் உட்பட முதியவர்களும், தினசரி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் இவ்வழியாக நடந்து செல்லும் போது அந்த சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள் அவர்களின் கால்களை பதம் பார்த்து விடுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சேதமடைந்த இந்த தார்ச்சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.