கலசப்பாக்கம், மே 26: தமிழகத்தில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருவதால், ஜமாபந்தியில் அளிக்கும் மனுக்கள் குறைந்துள்ளன.
பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக தாலுகா வாரியாக ஒரு குறிப்பிட்ட கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது துறைவாரியாக அதிகாரிகள் ஆய்வு செய்து மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம்.
தற்போது மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தாலுகாவில் உள்ள பிர்கா வாரியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு முகாம் மூலம் மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தாலுகாவில் முகாமிட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக ஆண்டுதோறும் தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வரும் ஜமாந்தி முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்குவர். ஆனால், தற்போது ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதற்கு காரணம் மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற சிறப்பு முகாம்கள் மூலம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தான்.
பொதுமக்கள் அதிகாரிகளை தேடி சென்று கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் நிலை மாறி தற்போது அதிகாரிகள் பொதுமக்களை தேடி சென்று மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது துறைவாரியாக உடனடி நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது.