Friday, June 20, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்!

ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்ஜன்னல்ஜப்பான் ஒரு அழகான நாடு. பச்சைப்போர்வை போர்த்திய மலைகள், நீலக்கடல், துறுதுறுவென்று திரியும் மக்கள், நல்ல கலாச்சாரம், பார்த்தாலே வாயில் நீர் ஊற வைக்கும் உணவுகள், எல்லாவற்றுக்கும்மேல் அந்நாட்டுப் பெண்கள்… வாவ்…; ஜப்பானின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்கள்.ஜப்பான் மக்களின் அழகு, இளமை, ஆரோக்கியம் எல்லாவற்றுக்கும் அவர்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் காரணம். முக்கியமாக அவர்களின் உணவுமுறை ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அடிப்படையாகக் கொண்டது. உலகிலேயே 100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்கள் அதிக சதவீதத்தினர் இருப்பதும் ஜப்பான் நாட்டில்தான். ஜப்பானியர்கள் உணவை சுவைக்காக மட்டும் உண்பதில்லை. கூடியவரை உணவிலிருந்து கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை பெறுவதில் உறுதியாய் இருக்கிறார்கள்.தங்கள் அழகிய தோற்றத்திற்காக அந்நாட்டுப் பெண்கள் 10 கட்டளைகளை பின்பற்றுகிறார்கள். அந்தக் கட்டளைகள்… க்ரீன் டீக்ரீன் டீ குடிப்பதை ஒரு சடங்காகவே ஜப்பானியர்கள் செய்கிறார்கள். க்ரீன் டீ இலைகளை காய வைத்து, நைஸாக பொடியாக்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து செய்யும் இந்த க்ரீன் டீக்கு Matchha டீ என்று பெயர். இந்த வகை டீ அருந்துவதை விழாவாக கொண்டாடுவது ஜப்பானிய கலாச்சார நடவடிக்கை ஆகும். க்ரீன் டீ ருசியானது மட்டுமல்ல; நன்மையும் தரக்கூடியது. மற்ற டீ வகைகளிலேயே ஆரோக்கியமானது. ஆன்ட்டி ஆக்சிடண்ட் நிறைந்துள்ளதால் ஃப்ரீ ரேடிகல்ஸ்களுக்கு எதிராக போராடுவதுடன் முதுமையை தாமதப்படுத்தவும் உதவுகிறது. எடை இழப்பிற்கும் உதவக்கூடியது. ஜப்பானின் Jama இதழில் வெளியான ஓர் ஆய்வின்படி, அதிகமாக க்ரீன் டீ உட்கொள்வதால், இதயநோயால் வரும் இறப்புகள் வராது எனவும், ஒரு நாளைக்கு 5 கப் க்ரீன் டீ குடிக்கும் ஜப்பானிய மக்கள் 26 சதவீதம் குறைந்த இறப்பு விகிதங்களை கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. நொதித்த உணவுகள்உணவுகளை நொதிக்க வைத்து(Fermentation) பயன்படுத்தும்போது, உணவுகளில் உள்ள சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சுகளில் இயற்கையான பாக்டீரியாக்கள் உருவாகி லாக்டிக் அமிலத்தை சுரக்கச் செய்யும். நொதித்தல், உணவுகளில் உள்ள இயற்கை சத்துக்களை பாதுகாக்கிறது. மேலும் நன்மை பயக்கும் நொதிகள் பி வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்வேறு ப்ரோபயாடிக்குகளை உருவாக்குகிறது.நொதித்தல், குடலுக்கு தீங்கிழைக்காத நல்ல பாக்டீரியாவை உருவாக்குகிறது. மேலும் உணவை எளிதில் செரிக்கும் வகையில் சிறு துகள்களாக உடைத்து கொடுப்பதால் உணவு எளிதில் செரிக்கவும், அதனால் எடை இழப்பு ஏற்படவும் செய்கிறது. கூடுதலாக செல் திசுக்களிலிருந்து நச்சுக்கள், கன உலோகங்களை வெளியேற்றவும் உதவுகிறது.நொதிக்க வைத்த பால்பொருட்களுக்கும், குடலில் நல்ல நுண்ணுயிர் வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு இருப்பதை 2014-ம் ஆண்டு Journal of physiological anthropology இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. பால் அல்லாத நொதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் மூலிகைகள் குடல் நுண்ணுயிர்மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது, நீண்ட கால குடலுக்கும் மூளைக்குமான தொடர்பில் நல்ல விளைவை உண்டாக்கலாம் என்ற தகவலையும் அந்த ஆய்வு கூறுகிறது. நம் நாட்டின் உறையூற்றிய தயிர், புளிக்க வைத்த தோசை, இட்லி மாவு போன்றவை சிறந்த நொதி உணவுகள்.; இதனால்தான் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் கொடுப்பதையும், எந்த நோயாக இருந்தாலும் இட்லியை கொடுப்பதையும் நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தியிருக்கிறார்கள். கடல் உணவுசிவப்பு இறைச்சியை அதிகம் உண்ணும் அமெரிக்கர்களுக்கு உடல்பருமன், உயர்கொழுப்பு, அழற்சி நோய்கள் அதிகம் காணப்படுவதோடு, சமீபமாக இந்த உணவுப்பழக்கம் இவர்களது புற்றுநோய்க்கும் காரணமாவதாகவும் கண்டறிந்துள்ளனர். மாறாக, ஜப்பானியர்கள் கடல் உணவை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். பல வகை கடல் உணவுகளுடன் கூடிய நெல் அல்லது நூடுல்ஸ் ஜப்பானியரின் பொதுவான உணவு வகைகள். இயற்கையாகவே கடல் சூழ்ந்துள்ளதால், ஷெல் ஃபிஷ், டூனா, சால்மன், மேக்கரல் மற்றும் இறால் போன்ற மீன் வகைகள் ஜப்பானியரின் உணவு வகைகளில் மிகப்பிரபலமானவை.உயர் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பலவகை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மீனில் நிறைந்துள்ளதால், மூளை, இதயம் மற்றும் உடல் உறுப்புகளுக்கு மிகச்சிறந்த உணவாகிறது. உடல் பருமன் மற்றும் அடி வயிற்றுக் கொழுப்பை குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. தோலை மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் வைத்துக் கொள்ள மீனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஜப்பானிய பெண்கள் அதிகம் நம்புகிறார்கள். இப்போது வேகவைத்த மீன், பேக்கிங் செய்த மீன், க்ரில் செய்த மீன் என புதிது புதிதாக பல வகைகளில் மீன் உணவுகளை தயாரிக்கவும் செய்கிறார்கள்.குறைவாக உண்பது…மூன்று வேளை தட்டு நிறைய சாப்பிடுவது ஜப்பானியர்களுக்கு பிடிக்காது. உணவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து குறைவாக சாப்பிடுவதால் எடையை இழக்க முடியும். பெரிய தட்டில், நிறைய வைத்தாலும் அது, பார்க்க கொஞ்சமாகத்தான் தெரியும். அதுவே சிறிய தட்டில் வைத்து சாப்பிட்டால் அதிகம் சாப்பிடுவதுபோல் இருக்கும். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி ஜப்பானியப் பெண்கள் எப்போதும் சிறிய ப்ளேட்டுகளில்தான் சாப்பிடுவார்கள். இந்தப்பழக்கம், அளவுக்குமீறி சாப்பிடுவதையும், அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதையும் தடுக்கும். நடைப்பயிற்சிஜப்பான் நகரங்களில் மக்கள் தொகை மிக அடர்த்தியானது என்பதால் மக்கள் பெரும்பாலும் அதிகமாக ரயில் பயணங்கள், சுரங்கப் பாதைகளை பயன்படுத்துகின்றனர். வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் போவதற்கும், வீடு திரும்புவதற்கும் சைக்கிள் உபயோகிப்பதையோ அல்லது நடப்பதையோதான் தேர்ந்தெடுப்பார்கள்.பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர் வாகனங்களில் கொண்டு விடாமல் அவர்களையே நடந்து செல்ல அறிவுறுத்துகின்றனர். நகரம் முழுவதும் மக்கள் சைக்கிளில் செல்லும் காட்சிகளை இயல்பாக பார்க்க முடியும்.; நடப்பதும், சைக்கிளில் பயணிப்பதும் அவர்களுக்கு உடற்பயிற்சியாகி விடுகிறது.வெளி சாப்பாட்டுக்கு நோ.. நோ…உணவு சாப்பிடும் நேரத்தை புனிதமாகக் கருதுபவர்கள் ஜப்பானியர்கள். ஓர் இடத்தில் அமர்ந்து அமைதியாக சாப்பிடுவது அவர்கள் மரபு. நகரங்களில் ரோட்டோரக் கடைகளில் நின்று சாப்பிடுவது, பஸ், ரயில் பயணங்களில் சாப்பிடும் காட்சிகளையோ காண்பது அரிது. இரண்டு உணவுகளுக்கு நடுவில் சிப்ஸ், பிஸ்கட் என எதுவும் கொறிக்கும் பழக்கமும் கிடையாது.சாப்பிடும்போது டிவி பார்ப்பது, லேப்டாப்பில் வேலை செய்வது, மொபைலில் பேசுவது எதுவும் கூடாது. சாப்பிடும் போது முழு கவனமும் சாப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவர்களது கட்டாய பழக்கம். அதேபோல, அவசரம் அவசரமாக எதையோ ஒன்றை முழுங்குவதும் கூடாது. உணவை மெதுவாக, நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதை அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே வழக்கப்படுத்திவிடுகிறார்கள். உணவு உண்பதை ஒரு தியானத்திற்கு நிகராக செய்கிறார்கள். அப்படி மெதுவாக, மென்று சாப்பிடுவதால், வயிறு போதும் என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும். அப்போது குறைவாக சாப்பிடுவோம். ;ஆரோக்கியமான சமைக்கும் முறைஜப்பானியர் சமையலில் ஆரோக்கியமான பொருட்களை உபயோகிப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான முறையில் சமைப்பதையும் கடைபிடிக்கிறார்கள். சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதையும், எளிமையாக சமைப்பதையும், க்ரில் செய்வதையும் கடைபிடிப்பதால், அதிகளவில் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள். நம்மூரைப்போல எண்ணெயில் போட்டு முறுகலாக வறுத்து சாப்பிடுவதில்லை. இது சமைக்கும்போது ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பையும், உணவுப்பொருளின் இயற்கையான ருசி கெடுவதையும் தடுக்கிறது. மொத்தத்தில் ருசிக்காக இல்லாமல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவதே அவர்களின் நோக்கம்.தற்காப்பு கலை பயிற்சிகராத்தே, ஜுடோ, குங்பூ, அக்கிடோ போன்ற ஜப்பானிய தற்காப்பு பயிற்சிகளை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் கற்றுக் கொள்வதால், ஜப்பான் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான தற்காப்புக் கலைகள், இதய உடற்பயிற்சி மற்றும் தாங்கு சக்தியை மேம்படுத்துகின்றன; தசை வலிமையை உருவாக்கவும், தசை நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன. 2013-ல் பெண்கள் உடல்நலம் பற்றிய கிளினிக்கல் மெடிக்கல் இன்சைட்ஸில் வெளியிடப்பட்ட ஒரு பைலட் ஆய்வில், தற்காப்பு கலை உடற்பயிற்சிகள் பெண்களின் உடலமைப்பை மேம்படுத்துவதாகவும், மெனோபாஸிற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்களின் உடல் எடை அதிகரிப்பு, எலும்பு வலுவிழப்பு, எலும்புகளின் வீக்கம் போன்ற அறிகுறிகளை கட்டுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெந்நீர் குளியல்நடைமுறையில் எல்லோராலும் கடைபிடிக்கப்படும், மிதமான சூட்டில் வெளிவரும் நீரூற்றுகளில் குளிக்கும் நடைமுறை அவர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாக நம்புகிறார்கள். இந்தக் குளியலை அவர்கள் ‘ஆன்சென்’ என்கிறார்கள். இந்த நீரூற்றுகள் உடலின் நோய்களை குணப்படுத்தும் சக்திகளை கொண்டுள்ளன. மக்னீசியம், கால்சியம், சிலிக்கா மற்றும் நியாசின் போன்ற கனிமப் பொருட்களை உள்ளடக்கிய நீரின் மிதமான வெப்பநிலை உடல்நலத்திற்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இப்படி குளிக்கும்போது தோல் இந்த தாதுக்களில் ஊறுவதால், ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் அதிகரிக்கிறது.; இதனால், உடல் முழுவதிலும் சிறந்த ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது. சிறந்த ரத்த மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சி உங்கள் இதயத்திற்கும் பிற முக்கிய உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிப்பதற்கும் இது உதவுகிறது. மேலும், உங்கள் தோல் ஆரோக்கியத்திற்கும் இந்தக் குளியல் உதவுகிறது.ஒரு மாதத்தில் 2 முறையாவது இந்த தாதுக்குளியலை எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ள; ஜப்பானியப் பெண்களின் ஸ்லிம் மற்றும் இளமையான தோற்றத்திற்கு இதுவே முக்கிய காரணம். இனிப்பா? ஐயோ கிட்டவே வராதே…பொதுவாகவே ஜப்பானிய உணவுமுறையில் இனிப்பு அதிகம் இடம் பிடிப்பதில்லை. அதிலும், பெண்கள் இனிப்பை மிக அரிதாகவே சாப்பிடுகிறார்கள். இதுவே அவர்களின் மெல்லிய தேகத்திற்கு முக்கிய காரணம். பெரும்பாலும் ஃப்ரஷ்ஷான பழங்கள், காய்கறிகளையே உணவில் அதிகம் சேர்க்கிறார்கள். மேலும் நாம் பயன்படுத்துவதைப்போல சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்கள், மற்ற செயற்கையாக கொழுப்பு பொருட்களை அவர்கள் உணவில் சேர்ப்பதில்லை. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பக்வீட் கோதுமை மாவு, பழங்கள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டுதான் இனிப்புப் பண்டங்களை தயாரிக்கிறார்கள். அப்படியே, இனிப்புகளை எடுத்துக் கொண்டாலும், அது அளவில் சிறியதாகத்தான் இருக்கும்! – உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi