துரைப்பாக்கம், மே 25: சென்னை ராஜிவ்காந்தி சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் தற்போது, மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே நேற்று மாலை சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். தகவலறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தினேஷ்குமார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கான்கிரீட் கலவை மற்றும் மண்ணை கொட்டி பள்ளத்தை சரி செய்து, அதன் அருகே இரும்பு தகடுகளை போட்டு சீரமைத்தனர். இச்சம்பவத்தால் சோழிங்நல்லூர் சிக்னலில் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே சாலையில் திடீர் பள்ளம்
0